ஈரோடு:அதிமுக ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான கே.சி.கருப்பண்ணன், அதிமுக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பேசுகையில், “இன்றைக்கு ஆளும் கட்சியாக உள்ள திமுக மிகக் கொடுமையான ஆட்சி செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் எந்த கட்சியும் இருக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் அவர்களே அழிந்து கொண்டு இருக்கின்றனர். அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் அப்படி என்ற பழமொழிக்கு அடையாளமாக திமுக அழிந்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கு என பல்வேறு திட்டங்களைக் கழகப் பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக 1600 கோடி ரூபாயில் அத்திக்கடவு அவினாசி திட்டம், கொடிவெரி கூட்டுக் குடிநீர் திட்டம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வரப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது.கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்பு அதிகமாக இருந்தது.