ஈரோடு: திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ‘இதயம் காப்போம்’ பேருந்து தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் சார்பில் நவீன மின் மயானம் மற்றும் கரோனா மருத்துவமனை ஆகியவை மூலம் பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் மத்தியில் இதயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களுக்கு இலவச பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை வழங்கிடும் வகையில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ‘இதயம் காப்போம்’ என்ற பேருந்து உருவாக்கப்பட்டது.
பேருந்தில் மருத்துவ குழுவோடு ஊர் ஊராக சென்று பொதுமக்களுக்கு இலவசமாக இதய மருத்துவ பரிசோதனை சிகிச்சை மற்றும் மருந்து பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பேருந்தில் இதயம் மட்டுமின்றி பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் போன்ற நோய்களைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்படும் என்றும் குடல் நோய்களைக் கண்டறிய குடல் உள்நோக்கி கருவியும் அதற்கான மருத்துவர்களும், ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள லேப் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:உடான் திட்டத்தின் கீழ் வேலூர் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிரது -வி.கே சிங்
மேலும், இந்த பேருந்து தொடக்க விழாவில் திரைப்பட நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜவகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், “இருதய அடைப்பு சம்பந்தமாக வரக்கூடிய பிரச்னைகளை முன்னே சொல்லக் கூடிய இது போன்ற விஷயங்களை தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு செய்தது வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.
இன்றைக்கு 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருதய சோதனை செய்யாமல் உதாசீனமாக இருந்து விடுகின்றனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ளவர்கள் இதன் முக்கியத்துவம் தெரியாமல் இருந்து விடுகின்றனர். இது போன்ற பரிசோதனைகள் வீடு தேடி போகும்போது அது பாராட்டக் கூடிய ஒன்றாகும். உடல் சார்ந்து மனம் இருக்கும். மனம் சார்ந்து உடல் இருக்கும்.
முடிந்த வரை அனைவரும் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். யாரும் அதனை கைவிட்டு விடாதீர்கள்” என்றார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் எது தமிழ், எது சமஸ்கிருதம் என்று தெரியாத அளவிற்கு நாம் அனைவரும் மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளோம்” என கூறினார்.
இதையும் படிங்க:ரேஷன், ஆதார் உள்ளிட்ட அனைத்து அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்க முடிவெடுத்த ஜவ்வாது மலைக் கிராம மக்கள்