தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள் தங்களது வெளிமாநிலப் பணியாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பவிடாமல் தடுத்தும், அடைத்தும் வைத்துள்ளதாகப் பல்வேறு புகார்கள் எழுந்தன.
இதேபோல், தற்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் உள்ள ஒருசில நிறுவனங்கள் தங்களது வெளிமாநிலத் தொழிலாளர்களை அனுப்பாமல் தடுத்துவைத்துள்ளதாகப் புகார் எழுந்தது.
இந்தப் புகார் உண்மையா என்பது குறித்து ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் நமது ஈடிவி பாரத் செய்தியாளருக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “எனது தலைமையில் அரசு உயர் அலுவலர்கள், காவல் துறை அடங்கிய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்குச் சென்று அங்கு பணிபுரிந்துவந்த வெளிமாநிலத் தொழிலாளர்களை மாநிலம் வாரியாக கணக்கெடுக்கப்பட்டது.
அவர்களில் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல விருப்பப்படுவோர் எத்தனை பேர் என்றும் இங்கேயே இருக்க விரும்புவோர் எத்தனை பேர் என்றும் பதிவுசெய்யப்பட்டது. அதேபோல், நிறுவனம் அல்லாத பல்வேறு இடங்களில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்தும் பட்டியல் எடுக்கப்பட்டது.