ஈரோடு:புதிய நீதி கட்சியின் மாவட்ட செயல் வீரர் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தலைமையில் இன்று(பிப்.19) நடைபெற்றது. இதில் ஈரோடு இடைதேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், பொன்னையன், தங்கமணி, கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க திமுக குறைகளே காரணம் - ஏ.சி.சண்முகம் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, திமுக அரசு 2 ஆண்டில் ஏராளமான சுமையை மக்கள் மீது வைத்துள்ளனர். இதை அரசுக்கு நினைவுபடுத்த அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மாற்று வேட்பாளர் வெற்றி பெறும் போதுதான் அரசுக்கு நினைவுக்குவரும். மின் கட்டணத்தால் தொழிற்சாலைகள் பாதிக்கப்படுகிறது. வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும், மீண்டும் பிரதமராக மோடி வருவார். ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசு 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து தன்னை நிரூபித்தவர். மக்களிடம் நன்கு அறிமுகமானவர். பல்வேறு மக்கள் நல பணிகளை செய்தவர். மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். திமுக அரசின் குறைகளே அதற்கு காரணம்.
அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி இருக்கின்றது. கடந்த 13 ஆண்டு காலம் எம்ஜிஆர் ஆட்சியில் வீட்டுவரி, மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. எங்களிடம் மக்கள் ஆதரவு இருக்கிறது, பணம் இரண்டாவது தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கமல் ஹாசன் பணத்துக்காக பிரச்சாரம் செய்ய கால் சீட் கொடுத்திருப்பார்.. செல்லூர் ராஜூ விமர்சனம்..