ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கவுந்தபாடி அடுத்துள்ள செந்தாம்பாளையம் காந்தி கோயிலில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.
கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தபாடி அருகேயுள்ள செந்தாம்பாளையத்தில் அமைந்துள்ள காந்திகோயிலில் ஆண்டுதோறும், குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய மூன்று முக்கிய நாள்களில், காந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்படும். மற்ற நாட்களில் மூன்று வேளையும் பூஜைகள் நடக்கும்.
இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காந்தி மற்றும் கஸ்தூரிபாய் அம்மையாரின் சிலைக்கு அபிஷேகம் நடந்தது. இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கலந்து கொண்டு தீர்த்தம் எடுத்து வந்து கோயிலில் நடைபெற்ற அபிஷேக விழாவில் கலந்துகொண்டார். காந்தி சிலைக்கு கதர் ஆடை, கண் கண்ணாடி அணிவித்து, கையில் தேசியக்கொடியுடன், விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல், கஸ்தூரிபாய் காந்திக்கும் அபிஷேக அலங்காரம் நடந்தது. பின் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டது. இந்த விழாவில் கவுந்தபாடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு காந்தி மற்றும் கஸ்தூரிபாய் சிலைகளை வழிபட்டுச்சென்றனர்.