ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “ஈரோடு மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் அப்துல் கனி மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு, 2 வருடங்களைக் கடந்த நிலையில், கடைக்கான வாடகை அளவு அதிகமாக இருந்ததால், கடைகள் செயல்பாட்டுக்கு வராத நிலையிலிருந்தது.
தமிழ்நாடு திருத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின் கீழ், மார்கெட் நிலவரப்படி விலை நிர்ணயம் செய்யப்பட்டதையடுத்து முதல் தளம் சதுர அடி ரூபாய் 93 ஆகவும், இரண்டாவது தளம் ரூபாய் 83 ஆகவும், மூன்றாவது தளம் ரூபாய் 63 என ஜி.எஸ்.டி உடன் நிர்ணயம் செய்து மாமன்ற உறுப்பினர்களின் அனுமதி பெறப்பட்டது.
மேலும், அப்துல் கனி மார்க்கெட்டில், ஜவுளி விற்பனை செய்து வந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற 260 கோரிக்கை மனுக்கள் மற்றும் உரிய ஆவணங்கள் அடிப்படையில் 113 வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வியாபாரிகள் கோரிக்கை ஏற்று, அனுமதி பெறாமல் சாலையோரம் விற்பனை செய்யும் ஜவுளிக் கடைகளை நெடுஞ்சாலை, காவல்துறை, வருவாய்த் துறைகளுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், முன்னுரிமை அளிக்கப்படும் வியாபாரிகளுக்குச் சலுகை விலை அடிப்படையில் கடைகள் வழங்கப்படும். இதில், இடம் பெறாதவர்கள் பொது ஏலத்தில் பங்கேற்று கடையை ஏலத்தில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், 15 நாட்களுக்குள் கனி மார்க்கெட் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாநகராட்சி பகுதியில் இரண்டு ஓடை உள்ளது.
அதில், பெருபள்ளம் ஓடை தூர்வாரப்பட்டுள்ள நிலையில், மற்றொரு ஓடையான பிச்சைக்காரன் பள்ளம் ஓடை தூர்வார ரூபாய் 7 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் இருந்து நிதி கிடைத்தவுடன் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் சாயக் கழிவு நீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாநகராட்சி தெரு நாய்கள் பிடிக்க மத்திய விலங்குகள் வாரியத்தின் கீழ் பதியப்பட்ட நிறுவனங்கள் மூலம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஈரோடு மாநகராட்சியில் தனபால் என்ற கால்நடை மருத்துவர் மூலம் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஈரோட்டில் கழிவு நீரின் பிடியிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாதுகாக்கப்படுமா..? -அரசுக்கு மக்கள் கோரிக்கை