ஈரோடு:சத்தியமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில், ஆடி வெள்ளிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும்.
இதற்கு தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் அம்மன் தரிசனத்திற்கு வந்து செல்வார்கள்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்காக மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
கோயிலில் பக்தர்கள் அனுமதி ரத்து அம்மன் தரிசனம் ரத்து
இதற்கிடையே இன்று (ஆகஸ்ட் 6) ஆடி வெள்ளி என்பதால், பண்ணாரி அம்மன் கோயிலுக்கு மக்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்ப்பின் காரணமாக, நோய்த்தடுப்பு நடவடிக்கையாக ஆடி வெள்ளி விழாவினை, மாவட்ட நிர்வாகம் திடீரென ரத்து செய்துள்ளது.
இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் நின்று கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். மேலும் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி அமாவாசை என்பதாலும், 11ஆம் தேதி ஆடிப்பூரம் என்பதாலும், கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பக்தர்கள் கோயில் வெளியே நின்று சாமி கும்பிட, கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோயில் நிலங்கள் குறித்த வழக்கு: இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு