ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குப்பன்துறை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் விக்னேஸ். இவர் பின்னல் ஆடை நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பின்னாலடை நிறுவனங்கள் விடுமுறை என்பதால் குப்பன்துறை பகுதி வழியாகச் செல்லும் கீழ்பவானி வாய்க்களுக்கு தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார்.
இரவானதால் மீட்பில் தாமதம்
அப்போது கீழ்பவானி வாய்க்காலில் அதிக அளவு நீர் சென்றுகொண்டிருந்ததால், விக்னேஸ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக நண்பர்கள், இது குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர்; அவர்கள் உடனே சத்தியமங்கலம் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மாயமான விக்னேசை தேடிவந்த நிலையில் தொடர் மழை காரணமாகவும், இரவானதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுத் திரும்பிச் சென்றனர்.