லட்ச ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு இயற்கை விவசாயம் செய்யும் இளைஞர்
ஈரோடு: லட்ச ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு இயற்கை விவசாயம் செய்து வருகிறார் முதுகலை கணினி பட்டம் பெற்ற இளைஞர் கிரிதரன்.
இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தினால் தான் பணியாற்றி வந்த கணினி பொறியாளர் வேலையை துறந்து இயற்கை விவசாயம் செய்துவரும் ஈரோட்டை சேர்ந்த கிரிதரன் என்ற இளைஞர் நஞ்சு இல்லாத உணவை மக்களுக்கு விவசாயிகள் தர வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.
தமிழகர்களின் பாரம்பரிய நெல் ரகங்களில் சுமார் 170க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மறைந்த நம்மாழ்வார் உடன் இணைந்து மறைந்த நெல் ஜெயராமன் மீட்டு எடுத்துள்ளார். இதில் பாரம்பரிய நெல் ரகங்களான காட்டுயானம், குடவாலை, பால் குடவாலை, பூங்கார், கருங்குறுவை, குள்ளக்காருக்கு, மட்டைக்கார், குழிவெடிச்சான், சேலம் சன்ன ரகம், தூயமல்லி, சிவப்பு கவுணி, கருப்புக் கவுணி, மைசூர் மல்லி, வாடன் சம்பா, கருடன் சம்பா, கொட்டாரச் சம்பா, மாப்பில்லை சம்பவ, தங்கசம்பா, வெள்ளிச்சம்பா, கிச்சலி சம்பா, இழுப்பைப்பூசம்பா என பல ஆயிரம் பாரம்பரிய நெல் ரகங்களை தமிழர்கள் பாரம்பரியமாக விவசாயம் செய்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நஞ்சு இல்லாத உணவை பயிரிட்டு உண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.
குறிப்பாக திருமணத்துக்கு முன்பு மாப்பிள்ளை சம்பாவும், திருமணத்துக்கு பின்பு கருப்புக் காவுணியும், மகப்பேறு காலத்தில் பூங்கார் ரகமும், குழந்தை பிறந்து 6-மாதத்தில் முதல் உணவாக குழந்தைக்கு வாடன் சம்பாவும் கொட்டாரச் சம்பாவும் என இயற்கை விவசாயத்தின் மூலமாக நஞ்சு இல்லாத பரம்பரிய நெல் ரகங்களை விவசாயம் செய்து உடலுக்கு சத்தான உணவை உண்டு ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர்.
பின்னர் ஏற்பட்ட கால மாற்றத்தினால் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள் வேறு வேலைக்கு சென்றனர். இருக்கும் விவசாயிகளும் விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் பல்வேறு ரசாயன உரங்களை கொண்டு விவசாயம் செய்து வந்ததால் விளையும் நிலமும் விளைவிக்கும் பொருட்களும் நஞ்சாக மாறி அதனை உட்கொள்ளும் மக்களுக்கும் பல்வேறு நோய் பிரச்சனைகள் ஏற்பட்டு ஆரோக்கிய மற்ற வாழ்கையை வாழ்ந்து தனது ஊதியத்தின் ஒரு பகுதியை மருத்துவமனைக்கே செலவு செய்யும் நிலை ஏற்பட்டது.
தற்போது நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்ற இயற்கையை நேசிப்பவர்கள் மூலமாக பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பல விவசாயிகளும் மீண்டும் இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகின்றனர்.
இதனை பார்த்து தானும் இவ்வாறு இயற்கை விவசாயம் செய்யலாம் என்று நினைத்து விவசாயத்தில் இறங்கி உள்ளார் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கிரிதரன் என்பவர். இவர் ஐ.டி. துறையில் முதுகலை கணினி பட்டம் பெற்று அமெரிக்காவின் கிளை நிறுவனமான கேரள மாநிலம் கொச்சியில் உயர்ந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தவர். இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு தனது வேலையை உதறிவிட்டு தான் முதன் முறையாக பயிரிட்ட கிச்சலி சம்பா பாரம்பரிய நெல் ரகத்தை வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார்.
நஞ்சு இல்லாத உணவை உயற்பத்தி செய்ய வேண்டும் என்ற இயற்கை விவசாயி நம்மாழ்வார் ஆகியோரின் பேச்சுகளை கேட்ட கிரிதரனுக்கு நாமும் ஏன் இயற்கை விவசாயம் செய்ய கூடாது என்ற எண்ணம் வந்துள்ளது. தனது இயற்கை விவசாய கனவை தனது பெற்றோர் மற்றும் மனைவி விநோதினியிடம் தெரிவிக்க அவர்களும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து உயர்ந்த ஊதியத்தில் தான் பார்த்துவந்த கணினி துறையின் வேலையை தூக்கி எரிந்து விட்டு தனது சொந்த ஊரான சித்தோடு ஊத்துக்காட்டில் உள்ள தனக்கு சொந்தமான 2.30-ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்யும் பணிகளை மேற்கொண்டார் கிரிதரன்.