ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் இன்று (டிச.6) அதிகாலை சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி ஜோரைக்காடு ரங்கசாமி கோவில் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.
விவசாய தோட்டத்தில் நுழைந்த யானை.. பீதியில் பொதுமக்கள்! காட்டு யானை விளைநிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதைக் கண்ட விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் காட்டு யானையை விரட்ட முயற்சித்தனர். அப்போது காட்டு யானை விவசாய தோட்டத்தை விட்டு நகராமல் போக்கு காட்டியது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதையும் படிங்க: புதுச்சேரி: யானை லட்சுமி மயங்கி விழுந்த சிசிடிவி காட்சி!