ஈரோடு: மாநில அளவிலான இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் மாநாடு இன்று (டிச.08) ஈரோட்டில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி டிச.09 மற்றும் 10 ஆகிய தேதிகள் வரை இந்த மாநாடு நடைபெறும். இவ்வாறு மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் தொடக்க நாளான இன்று, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடக்கிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் மருத்துவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க உள்ள டாக்டர் அபுல் ஹசன் கூறுகையில், "இந்த மாநாட்டில், 2024 ஆண்டிற்கான மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், அடிப்படை உயிர்காக்கும் பயிற்சியினை அளிக்க உள்ளோம்.
மாரடைப்பு அல்லது விபத்து காரணமாக இதயம் நின்றுவிட்டால் மருந்து அல்லது ஆக்ஸிஜன் இல்லாமல் கைகளால் மட்டும் நின்றுபோன இதயத்தைத் துடிக்கவைக்கப் பயிற்சி கொடுக்கும் 'ஜீவன்' என்ற பெயரில் புதிய திட்டத்தை நாளை (டிச.09) துவங்க உள்ளோம். இதில் 2 ஆயிரத்து 500 மருத்துவர்கள் வீடுவீடாக சென்று பயிற்சி கொடுத்து, தமிழக மக்களை உயிர் காப்பாளர்களாக ஆக்க உள்ளனர்.
இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரியைத் தொடர்ந்து, தற்போது வீடுவீடாக சென்று பயிற்சி அளிக்க உள்ளோம். ஒரு மருத்துவர் வருடத்திற்கு சுமார் 5 ஆயிரம் நபருக்குப் பயிற்சி அளிக்க உள்ள. மேலும், 160 மருத்துவ சங்க கிளைகள் மூலம் இந்த திட்டம் வேகமாகச் செயல்படுத்தப்படும்.