ஈரோடு: கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அசோக் குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது அப்பாஸ் என்பவருக்கு சொந்தமான லாரியின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (செப்.04) திருப்பூர் அருகே உள்ள மடத்துக்குளம் பகுதியிலிருந்து பேப்பர் பாரம் ஏற்றிக்கொண்டு, கர்நாடக மாநிலம், மைசூர் செல்வதற்காக லாரியை ஓட்டிச் சென்றுள்ளார் அசோக்குமார்.
லிப்ட் கொடுத்ததற்கு மிளகாய்ப்பொடி
அப்போது திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி என்ற நபர் வழியில் லிப்ட் கேட்டு லாரியில் ஏறியுள்ளார். இதையடுத்து லாரி சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அருகே அடர்ந்த வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அய்யாசாமி திடீரென தான் வைத்து இருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து அசோக் குமாரின் கண்ணில் தூவியுள்ளார்.
பின்னர் அசோக் குமாரை அய்யாசாமி கீழே தள்ளிவிட்டு லாரியைக் கடத்தியுள்ளார். உடனடியாக ஓட்டுநர் அசோக் குமார் அருகே உள்ள பண்ணாரி சோதனைச் சாவடிக்கு சென்று சோதனைச் சாவடி காவல் துறையினரிடம் லாரி கடத்தப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சத்தியமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கடத்தப்பட்ட லாரி சென்ற சாலையில் சென்று அய்யாசாமியை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து லாரியை மீட்டனர். இதனைத் தொடர்ந்து அய்யாசாமியை கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போதையில் தகராறு: மனைவியைக் கத்தியால் குத்தியவர் கைது