தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு! - யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் மரவள்ளி பயிருக்கு காவல் இருந்த விவசாயிகளை யானை தாக்கியதில் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு
விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

By

Published : Jan 16, 2021, 1:35 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியிலுள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி. இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் மானாவாரியாக மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், பெரியசாமியும், அவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த சடையப்பன் ஆகிய இருவரும் நேற்றிரவு (ஜன.15) பயிர்களை பாதுகாப்பதற்காக தங்களது விவசாய தோட்டத்திற்குச்சென்றனர்.

இந்த நிலையில், இன்று (ஜன.16) அதிகாலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டுயானை பெரியசாமியின் மரவள்ளி பயிருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதைக் கண்ட பெரியசாமி, சடையப்பன் இருவரும் காட்டு யானையை விரட்டியடிக்க முயற்சித்தனர். அப்போது யானை இருவரையும் துரத்தியது.

இதையடுத்து தப்பி ஓட முயன்றபோது, பெரியசாமியை தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு யானை மிதித்தது. இதில் பெரியசாமி படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார். யானையிடமிருந்து தப்பியோட முயன்ற சடையப்பன் தவறி விழுந்து இடது காலில் காயம் ஏற்பட்டது. யானை வருவதைக் கண்டு சத்தம்போட்டதையறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று யானையை விரட்டியடித்துவிட்டு காயம்பட்ட பெரியசாமி, சடையப்பன் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவர்களை கொண்டு செல்லும் வழியிலேயே பெரியசாமி உயிரிழந்தார். சடையப்பன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கடம்பூர் காவல் துறையினர், சத்தியமங்கலம் வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வனத்தை விட்டு வெளியேறும் காட்டுயானைகள் விவசாயிகளை அடித்துக் கொல்வது தொடர் கதையாக உள்ளதால் மலை கிராம விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் யானை மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து

ABOUT THE AUTHOR

...view details