ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம், கோம்பைத்தொட்டி, அருகியம் கிராமங்களில் 750-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியைச்சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் 40 மாணவ, மாணவியர் கடம்பூர் மேல்நிலைப்பள்ளிக்கு அரசுப்பேருந்தில் சென்று வருகின்றனர்.
மருத்துவம், மளிகை, காய்கறிச்சந்தை உள்ளிட்ட அத்தியாவசிய அன்றாடத்தேவைகளுக்கு கடம்பூர், சத்தியமங்கலம் செல்ல வேண்டியுள்ளது. இவர்கள் சுமார் 20 கி.மீ. தூரம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பயணித்து சர்க்கரைப்பள்ளம், மாமரத்துப்பள்ளம் ஆகிய காட்டாற்றுகளைத் தாண்டி செல்கின்றனர். கடந்த 12 நாள்களாக இரு காட்டாறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அரசுப்பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டது.
தற்போது இரு தினங்களாக வெள்ளம் வடிந்த பிறகு 3 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் இரு காட்டாறுகளில் கற்கள் போட்டு, பேருந்து செல்லும் வகையில் சாலை அமைத்தனர். கடந்த 12 நாள்களுக்குப்பின் இன்று கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அரசுப்பேருந்து சர்க்கரைப்பள்ளம் காட்டாறைக் கடக்க முயற்சித்தபோது, பேருந்தின் சக்கரங்கள் சேற்றில் சிக்கி நகராமல் நின்றது. இதனால் பேருந்தில் இருந்து பயணிகள் ஆற்றில் இறங்கி கரை சேர்ந்தனர்.
பேருந்து மேலும் இயக்கமுடியாத நிலையில் அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வேறு போக்குவரத்து வாகனங்கள் இல்லாததால் பயணிகள், விலங்குகள் அச்சுறுத்தும் காட்டுப்பகுதியில் காத்திருந்தனர். பின்னர் கடம்பூரில் இருந்து ஜேசிபி வரவழைக்கப்பட்டு, சுமார் 4 மணி நேரப்போராட்டத்துக்குப்பின் பேருந்து நகர்த்தப்பட்டு பேருந்து மீண்டும் புறப்பட்டது. தினந்தோறும் சிரமங்களை சந்திக்கும் மக்கம்பாளையம் பகுதி மக்களின் கோரிக்கையான உயர்மட்ட பாலம் விரைவில் கட்ட வேண்டும் என்பது 75 ஆண்டுகள் கால கோரிக்கையாக உள்ளது.
சர்க்கரைப்பள்ளம் காட்டாற்றில் சிக்கிய அரசு பேருந்து இதையும் படிங்கள்:குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாட்களுக்குப்பிறகு அனுமதி