ஈரோடு: பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் பவானி ஆறு மற்றும் மாயாறு(Moyar River) வழியாக அணைக்கு வந்து சேருகிறது. நீலகிரி மலைப்பகுதியில் உள்ள கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழை நீர் அப்பகுதியில் உருவாகும் மாயாற்றில் பெருக்கெடுத்து சீகூர் வனப்பகுதி மற்றும் தெங்குமரஹாடா வனப்பகுதி வழியாகப் பயணித்து பவானி சாகர் அணைக்கு வந்தடைகிறது.
தெங்குமரஹாடா வனப்பகுதி வழியாக ஓடும் மாயாற்றில் முதலைகள் அதிக அளவில் வசிக்கின்றன. இந்நிலையில் பவானி சாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள மாயாற்றின் கரையில் ஒரு முதலை படுத்திருப்பதைக் கண்டு அவ்வழியே சென்றவர்கள் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.