ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் உள்ள இக்களூரில், விவசாய தோட்டத்தின் பண்ணை வீட்டில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஆசனூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இக்களூர் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இக்களூரை சேர்ந்த மாதேஷ் என்பவரது பண்ணை வீட்டில், சுமார் 9 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டு இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சூதாடியவர்கள் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ், மகேஷ், சித்தன் மற்றும் தாளவாடி பகுதியை சேர்ந்த ஆனந்தன், குமாரசாமி, குருசாமி, சிவமல்லப்பா, குருசாமி மற்றும் தோட்டத்தின் உரிமையாளர் மாதேஷ் என்பதும், பண்ணை வீட்டில் தங்கி பணம் வைத்து சீட்டு விளையாடியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 9 பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து சீட்டு விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு கார், மூன்று இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: காதலை பிரித்த கோபம்.. 15 வயது மாணவிக்கு இளம்பெண் செய்த கொடுமை...