விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலிக்குத்தி நடுகல், சிவலிங்கம் கண்டெடுப்பு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அங்கண கவுண்டன் புதூர் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தின் நடுவில் உள்ள பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் கல்லினாலான சிவலிங்கம், 2 புலிக்குத்தி நடுகல் மற்றும் நந்தி சிலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து முனுசாமி, கோவையைச் சேர்ந்த அரண் பணி அறக்கட்டளை குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் விவசாய தோட்டத்திற்கு விரைந்த அரண் பணி அறக்கட்டளை குழுவினர் கிராம மக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம் மற்றும் இரண்டு புலிக்குத்தி நடுகற்களை தோண்டி எடுத்தனர்.
விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புலிக்குத்தி நடுகல், சிவலிங்கம் கண்டெடுப்பு பழமையான இந்த சிவலிங்கம் சிலையை மரத்தடியில் வைத்து சிறப்பு பூஜைகளை செய்து வழிபாட தொடங்கினர். பழமை வாய்ந்த சிவலிங்கம் சிலை மற்றும் புலிகுத்தி நடு கற்கள் கண்டறியப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றுவருகின்றனர்.
இதுகுறித்து அரண் பணி அறக்கட்டளை குழு தரப்பில், இங்கு கண்டெுக்கப்பட்ட சிவலிங்கம் ஆதார பீடத்துடன் மூன்றடி உயரமும் இரண்டடி விட்டமும் கொண்டதாக உள்ளது. சிவலிங்கத்திற்கு அருகில் 800 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் கிடைத்துள்ளது. அதனருகில் மண்ணில் புதைந்திருந்த மூன்று நந்திகளும் இரண்டு புலிக்குத்தி நடுகற்களும் கண்டெடுக்கப்பட்டன.
சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் நடமாட்டம் இருந்ததும், கால்நடைகளை வேட்டையாட வந்த புலிகளுடன் இப்பகுதியிலுள்ள வீரர்கள் சண்டையிட்டு இறந்ததால் அதன் நினைவாக இது போன்ற புலி குத்தி நடு கற்கள் நடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த நடு கல்லில் புலியை வீரர் ஒருவர் ஈட்டியால் குத்துவது போன்று உள்ளது. அதில் வேட்டை நாய்கள் மற்றும் வீரரின் மனைவி போன்ற உருவங்களும் இடம் பெற்றுள்ளன. மற்றொரு நடுகலில் கூர்வாளால் புலியை குத்துவது போன்ற உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகக்கோப்பை ஹாக்கி போட்டி.. ஒடிசாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..