தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 80 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பு மனு பரிசீலனையில் அதிமுக வேட்பாளர் தென்னரசு, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா உள்ளிட்ட 80 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 80 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 80 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு

By

Published : Feb 8, 2023, 3:59 PM IST

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 80 பேர் வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலானது வரும் 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ஆம் தேதியில் இருந்து தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவகுமாரிடம் 31ஆம் தேதியிலிருந்து நேற்று மாலை 3 மணி வரையில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் சிவப்பிரசாந்த், தேசிய முற்போக்கு திராவிடர் கழக வேட்பாளர் ஆனந்த், அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் உள்ளிட்ட 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் வேட்பு மனு மீதான பரிசீலனை இன்று காலை முதல் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த வேட்பு மனு மீதான பரிசீலனையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, தேசிய முற்போக்கு திராவிடர் கழக வேட்பாளர் ஆனந்த் ஆகியோரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

குக்கர் சின்னம் கிடைக்காததால் போட்டியிலிருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். ஆனால், அந்த கட்சியின் வேட்பாளராக இருந்த சிவப்பிரசாந்தின் வேட்பு மனுவானது ஏற்கப்பட்டுள்ளது. அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த செந்தில் முருகன் வேட்பு மனுவில் படிவம் ஏ, பி இல்லாததால் அவர் சுயேச்சை வேட்பாளராக கருதப்பட்டார். சுயேச்சைக்கு 10 பேர் முன்மொழிதல் தேவை என்பதால், போதிய முன்மொழிதல் இல்லாத காரணத்தால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என பிரதான கட்சிகளுடன் சேர்த்து 96 வேட்பு மனுக்களில் 80 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் திரும்பப் பெற கடைசி நாளாகும். இதனைத் தொடர்ந்து 27ஆம் தேதி வாக்குப்பதிவும் அடுத்த மாதம் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: இரட்டை இலைச் சின்னம் கிடைத்தாலும் எடப்பாடி பழனிசாமியால் ஜெயிக்க முடியாது - டிடிவி தினகரன்

ABOUT THE AUTHOR

...view details