ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் ஊராட்சியில் இன்று மாவட்ட வருவாய் அலுவலரின் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா 52 பயனாளிகளுக்கு சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதியோர் உதவித்தொகை, வேளாண்மைத் துறையின் சார்பில் சொட்டு நீர் மானியம், தோட்டக்கலைத் துறையின் சார்பில் உரங்கள், வருவாய்த் துறையின் சார்பில் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
இம்முகாமில் பங்கேற்ற அனைத்துத் துறை அலுவலர்களும் தங்கள் துறைகளின் சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துரைத்தனர்.
நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றிய மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, "நெகிழிப் பயன்பாட்டை பொதுமக்களும் விவசாயிகளும் தாங்களாகவே முன்வந்து தடைசெய்ய வேண்டும், மழைநீர் சேகரிப்புத் தொட்டியை ஒவ்வொரு வீடுகளிலும் விவசாயத் தோட்டங்களிலும் அமைக்க வேண்டும், கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று எடுத்துரைத்தார்.