ஈரோடு:ஈரோடு மாவட்டத்தைஅடுத்த சோலார் பகுதியில் அதிக அளவில் கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பதாகவும், கஞ்சா விற்பனை செய்வதாகவும் ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் ஈரோடு சோலார் அடுத்த பாலுசாமி நகர் பகுதியில் வீடு ஒன்றில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது சாக்கு மூட்டையில் 50 கிலோ எடையிலான கஞ்சா பதுக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அதனை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலுசாமி நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கௌதம் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பிடிபட்ட 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, இளைஞர்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதற்காக வைத்து இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.