ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள திகினார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவருக்கு வினிதா என்ற மனைவியும் ஹர்சித் (4), ஹர்சிணி (1) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது தோட்டத்தில் விவசாய உபயோகத்திற்காக தண்ணீரை சேமிக்க 4 அடி ஆழத்தில் பண்ணை குட்டை கட்டப்பட்டுள்ளது.
போர்வெல் தண்ணீரை குட்டையில் சேமித்து பின்னர் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக இந்த குட்டை உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீர் குட்டை அருகே ஹர்சித் விளையாடிக்கொண்டிருந்தபோது குட்டையில் தவறி விழுந்துள்ளான். ஹர்சித் காணாமல் போனதையறிந்து செல்வகுமார், வினிதா இருவரும் தேடிப்பார்த்துள்ளனர்.
பண்ணை குட்டையில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு அப்போது அவர்களது விவசாய தோட்டத்தில் உள்ள தண்ணீர் குட்டையில் ஹர்சித் விழுந்துகிடந்தது தெரியவந்துள்ளது. அவனை மீட்டு உடனடியாக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பண்ணை குட்டையில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மழைநீர் சேகரிப்புத் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழப்பு!