ஈரோடு: சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளி பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதிக்குச் சென்ற வருவாய்த்துறை அலுவலர்கள் விண்ணப்பள்ளி அசோகன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சுமார் ஐந்து அடி ஆழம் தோண்டி கிராவல் மண் லாரி மற்றும் டிராக்டரில் பாரம் ஏற்றுவதை கண்டனர்.
வருவாய்த்துறை அலுவலர்கள் அருகே சென்றபோது அங்கிருந்த 4 பேர் தப்பியோடினர். இதைத்தொடர்ந்து கிராவல் மண் வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு பொக்லைன் இயந்திரங்கள், கிராவல் மண் பாரம் ஏற்றிய ஒரு டிப்பர் லாரி, ஒரு டிராக்டர் என நான்கு வாகனங்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அலுவலர்கள், வாகனங்களை சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.