தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரிக்கு அருகே குட்கா விற்பனை செய்த மூவர் கைது.. ஈரோடு போலீசார் அதிரடி! - gutkha sellers arrested near perundurai

3 arrested for selling gutkha: பள்ளி கல்லூரிகள் நிறைந்த பகுதியில் மாணவர்களை அடிமைப்படுத்தும் 37 கிலோ குட்கா பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஈரோடு மாவட்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 பேருக்கு சிறை
பெருந்துறையில் பள்ளி கல்லூரிகள் நிறைந்த பகுதிகளில் குட்கா விற்பனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 11:48 AM IST

ஈரோடு: பெருந்துறை அருகே கல்லூரிகள் அதிகமாக உள்ள பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்து வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 2.30 லட்சம் மதிப்பிலான 37 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை தமிழக அரசு தடை செய்துள்ள நிலையில் பள்ளி கல்லூரி உள்ள பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் கல்லூரிகள் அதிக அளவில் செயல்பட்டு வரும் நிலையில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

முன்னதாகவே இப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் இந்த பகுதியின் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: வேலூரில் சேட்டை செய்ததாக சிறுவனுக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த அத்தை!

இந்த விசாரணையின் போது வாய்க்கால்மேடு பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.30 லட்சம் மதிப்பிலான 37 கிலோ குட்கா பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை பொருட்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்டு மற்றும் அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கல்லூரி உள்ள பகுதியிலேயே மாணவர்களை கெடுக்கும் போதை பொருட்கள் விற்கப்பட்டு வந்த சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உத்தர பிரதேசத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்.. பள்ளி ஆசிரியர் மீது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details