ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.55 கோடி செலவில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென நகர்ப்பகுதியில் உள்ள சாலைகளில் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு, பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் படித்துறை பகுதியில் கழிவு நீரேற்று நிலையமும், கோட்டுவீராம்பாளையம் மின் மயானம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே பாதாளச் சாக்கடை திட்டத்தில் வரும் கழிவு நீர், பவானி ஆற்றங்கரையில் கலக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறி, சத்தியமங்கலம் நகர்ப்பகுதி பொதுமக்கள், அனைத்துக்கட்சியினர் ஆற்றங்கரையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும் சுத்திகரிப்பு நிலையத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்தனர். மேலும் பவானி ஆற்றில் கழிவு நீர் கலக்கக்கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து, சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் இப்பிரச்னை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினர், பொது மக்கள் பவானி ஆற்றங்கரையில் பாதாளச் சாக்கடை கழிவுகள் கலக்கக் கூடாது எனவும்; ஆற்றங்கரையோரம் விதிமுறைகளுக்கு முரணாக கழிவு நீரேற்று நிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தையும், சுத்திகரிப்பு நிலையத்தையும் நகர்ப்பகுதியிலிருந்து 5 கி.மீ., தூரம் தள்ளி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.