சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்குமாரஹாடா கிராமம். தெங்குமரஹாடா குறுக்கே ஓடும் மாயாற்றைப் பரிசலில் கடந்து செல்லும் மக்கள், மழை நீர் குறையும் போது மட்டுமே மாயாற்றில் நடந்து செல்வார்கள்.
வெளியாட்கள் எளிதாகச் செல்லமுடியாத இக்கிராமத்திலும் கரோனா தொற்றுப் பரவியுள்ளது. சளி, காய்ச்சலால் அவதியுற்று வந்த மக்கள் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று பரிசோதனை செய்தனர்.
அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண்பிரசாத் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்ததில் இரண்டு குழந்தை உட்பட 25 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட 22 பேர் கிராமத்திலேயே மருத்துவர் அருண்பிரசாத் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூன்று பேரை ஆற்றை கடந்து கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அன்றாட தேவைக்குப் பவானிசாகர், சத்தியமங்கலம் சென்று வந்த இக்கிராமவாசிகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அது மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம் என, மருத்துவக் குழுவினர் கருதுகின்றனர்.
இதையடுத்து நோய் மேலும் பரவாமல் இருக்க, 500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக வீதி, வீதியாக கிருமிநாசினி தெளித்தும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து காய்ச்சல்,சளி தொந்தரவு குறித்து மருத்துவக் குழுவினர் பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ’கரோனாவால் பலியான காவலர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு’ - அன்புமணி ராமதாஸ் வரவேற்பு