ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விஞ்ஞானி 2019 என்கிற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான அறிவியல் கண்காட்சிப் போட்டி நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த அறிவியல் கண்காட்சிப் போட்டியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.
அறிவியல் கண்காட்சியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்கள் 596 அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இந்தப் படைப்புகளில் விவசாயம் சார்ந்த படைப்புகள் அதிகளவில் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக காவிரி ஆறு செல்லும் வழியில் கழிவு நீர் அதிகளவில் கலக்கும் பகுதியை கண்டறிந்திடவும், கழிவு நீர் கலப்பதால் ஏற்படும் ஆபத்து குறித்து அலுவலர்களுக்கு தெரிவித்திடும் வகையில் அலாரத்தை அமைத்திருந்தனர்.
இதேபோன்று, வேகத்தடையில் போக்குவரத்து விதியை மீறி வாகனங்களை இயக்க முற்பட்டால் கடும் சப்தத்துடன் அலாரம் அடிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பு கருவியும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.