ஈரோடு:மொடக்குறிச்சி தாலுக்கா, லக்காபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (60). தறி பட்டறையில் பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகாத நிலையில், தனது சகோதிரி வீட்டில் இவர் தங்கியிருந்தார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தன் சகோதரி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த லக்காபுரத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியை தங்கராசு கண்காணித்து வந்துள்ளார்.
தொடர்ந்து, சிறுமியின் அருகில் யாரும் இல்லாதபோது, அவரை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முன்னதாக புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில், நீதிபதி மாலதி இவ்வழக்கை விசாரித்து, தங்கராசுவுக்கு போக்சோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம், மிரட்டல் விடுத்ததுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நேற்று (செப்.02) தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் இரண்டு லட்ச ரூபாய் வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
இதையும் படிங்க:சிறுவனுக்கு உடல் முழுவதும் சூடு வைத்து கொடுமை - தந்தை உள்பட இருவர் கைது