ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. இங்குள்ள யானைகள் தண்ணீர் குடிப்பதற்கு மாயாற்றுப் பகுதிக்கு வந்து, செல்வதால் தெங்குமரஹாடா சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதற்கிடையே, சுஜ்ஜில்குட்டை காப்புக்காட்டுப் பகுதியிலிருந்து வந்த 20 வயதுள்ள ஆண்யானை, குடற்புழு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல், தெங்குமரஹாடா சாலையில் உள்ள ஊசிப்பள்ளத்தில் கீழே விழுந்தது.
வனச்சாலையின் மத்தியில் யானை விழுந்து உயிருக்குப் போராடி வந்த நிலையில், அவ்வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பவானிசாகர் வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையைத் தூக்கி நிற்க வைக்க முயன்றனர். ஆனால், யானை நிற்கமுடியாத நிலையில் இருந்தது. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து யானை உயிரிழந்தது.