ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
தாளவாடி மலைப்பகுதியில் உள்ள அக்கூர் ஜோரை வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கருப்பன் யானை தினமும் கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, இரவு நேரங்களில் காவல் பணி மேற்கொள்ளும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதன் காரணமாக திகினாரை, ரங்கசாமி கோவில், கரளவாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பன் யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.