சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதி மல்லியம்மன்துர்கம் கிராமத்திற்கு சாலை வசதி செய்து தரப்படாததால் வாக்களிக்கமாட்டோம் என தேர்தல் புறக்கணிப்பு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஞாயிற்றுக்கிழமை கடம்பூர் மலைப்பகுதி மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் விநியோகிக்கப்பட்டது.
வாக்களிக்கமாட்டோம் என துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்த அச்சக உரிமையாளர், விவசாயி மீது வழக்குப்பதிவு !
ஈரோடு: வாக்களிக்கமாட்டோம் என துண்டுப்பிரசுரங்கள் அச்சடித்த அச்சக உரிமையாளர் மற்றும் விவசாயி மீது கடம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கடம்பூர் காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் மல்லியம்மன்துர்கம் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தபோது வாக்களிக்கமாட்டோம் என நாங்கள் துண்டுப்பிரசுரம் அச்சடிக்கவில்லை என கூறியுள்ளனர்.
இதையடுத்து மல்லியம்மன் துர்கம் கிராமத்தை சேர்ந்த கல்கடம்பூர் கிராமத்தில் வசித்து வரும் சுப்பிரமணி (52) என்பவர் மல்லியம்மன் துர்கம் கிராம பொதுமக்களை கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து துண்டுப் பிரசுரம் அச்சடித்து விநியோகித்ததாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால் அனுமதியின்றி துண்டுப்பிரசுரம் அச்சடித்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் ஹரி (55) ஆகிய இருவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன் கடம்பூர் காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தார். புகாரின் அடிப்படையில் கடம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.