ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த பொலவக்காளிபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெரியார்நகர், இந்திராநகர், ஆலங்காட்டுப்புதூர், கங்கம்பாளையம், செங்கோட்டையன் நகர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவ மாணவிகள் மிதி வண்டிகள் மூலம் பள்ளிக்குச் சென்றுவருவது வழக்கம்.
கரோனா தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் செயல்படாத நிலையில், தற்போது 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என அரசு அறிவித்தது. இதையடுத்து, முதல்நாளான இன்று பள்ளிக்குச் செல்ல மாணவ மாணவிகள் ஆர்வம் காட்டிவருகின்றனர். கங்கம்பாளையம், செங்கோட்டையன் நகர், பெரியார்நகர், ஆலாங்காட்டூர் ஆகிய பகுதிகளில் பேருந்து போக்குவரத்து இல்லாததினால் அனைத்து மாணவ மாணவிகளும் அரசு வழங்கியுள்ள மிதிவண்டிகள் மூலமாகவே பள்ளிக்குச் சென்றுவருகின்றனர்.
கொட்டிய தேனீக்கள்
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவிகளான பவித்ரா, மைவிழி, மோகனபிரியா, மேகவர்ஷினி ஆகிய நான்கு பேரும் செங்கோட்டையன்நகர் பகுதியிலிருந்து பொலக்காளிபாளைத்தில் செயல்படும் அரசு பள்ளிக்கு மிதிவண்டியில் சென்றபோது, கங்கம்பாளையம் பகுதியில் சென்றபோது பறந்து வந்த மலைத்தேனீகள் மாணவிகளை சரமாரியாக கொட்டத் தொடங்கியுள்ளது. அதில், நிலைகுலைந்து போன மாணவிகள் செய்வதறியாது அச்சமடைந்து அருகிலுள்ள வீட்டினுள் தஞ்சமடைந்துள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் போராடி நான்கு மாணவிகளையும் வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
தகவலறிந்து அங்கு வந்த பெற்றோர்கள் மாணவிகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பவித்ரா என்ற மாணவி மட்டும் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க:'பொழுதுபோக்கான தேனீ வளர்ப்பு... இப்போ லாபம் கொழிக்கும் தொழில்!'