நான்கு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும், கரோனாவின் தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் தொற்று பரவும் வேகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட ஊரங்கில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளன. ஆரம்பத்தில் தொற்றின் தீவிரம் குறைவாக இருந்ததால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தட்டுத் தடுமாறி அரசு நடத்திமுடித்தது.
ஆனால், 10ஆம் வகுப்பு மாணவர்களின் உயர் கல்வியைத் தீர்மானிக்கும் பொதுத்தேர்வை நடத்துவதற்குள் கரோனா பரவல் வேகமெடுத்தது. மார்ச் 24ஆம் தேதி முதல் தேர்வு நடத்துவது குறித்து எதுவும் கூறாமல் அரசு மௌனமாக இருந்தது. இதனிடையே ஆசிரியர் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று குரல் எழுப்பின.
இச்சூழலில் கடந்த 12ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு நடத்தப்படும் என அதிரடியாக அறிவித்தார். அவரின் அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியாமால் தமிழ்நாடு தவிக்கும் சூழலில், மாணவர்களின் உயிரைப் பறிக்கும் இந்த முடிவை உடனே கைவிட வேண்டும் எனவும், தேர்வை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனக் குரல் எழுப்பின. தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பலை கிளம்பியதையடுத்து, தற்போது ஜூன் 15ஆம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்திவைப்பும் தங்களுக்குப் போதாது, பள்ளிகளைத் திறந்து ஒரு மாத காலம் பாடம் கற்பித்து, தங்களைத் தேர்வுக்குத் தயார்படுத்தி, அதன்பின் தேர்வை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தலமலை, குன்றி, கெத்தேசால், கடம்பூர், மல்லியம்துர்க்கம், கொங்காடை, பர்கூர், தட்டகரை, தேவர்மலை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்ளில் 50 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு, அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் 10 கிமீ நடந்து சென்றே மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட கிராம மாணவர்கள் 20 கிமீ தூரம் பேருந்தில் வந்தே தேர்வெழுத வேண்டிய நிலை உள்ளது.
இந்த மலைக்கிராமங்களில் அவசர உதவிக்கு 108 ஆம்புலன்ஸை அழைக்கக் கூட முடியாது. ஏனெனில், அங்கு ஒரு செல்போன் டவர் கூட கிடையாது. நிலவரம் இப்படியிருக்கையில், தங்களால் ஆன்லைனில் எப்படி பாடம் படிக்க முடியும் என்று கேட்கின்றனர் அம்மாணவர்கள். இந்த அவலத்தின் உச்சமாக அரசு தேர்வு அறிவித்தது கூட தங்களுக்குத் தெரியாது என்றும் கூறுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், குடும்பத்தைக் காப்பாற்ற இம்மாணவர்கள் 50 நாள்களுக்கும் மேலாக கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்வதால், தாங்கள் என்ன படித்தோம் என்பதையே மறந்துவிட்டோம் என்கிறார்கள் வேதனையோடு.
இதுகுறித்து இந்தாண்டு 10ஆம் வகுப்பு தேர்வு எழுதப்போகும் மாணவர்களிடம் பேசினோம். அவர்கள், “இவ்வளவு நாள் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பத்திலேயே படிக்காமல் இருந்துவிட்டோம். ஆனால், தற்போது தீடீரென்று ஜூன் 1ஆம் தேதி தேர்வு என்று அறிவித்தது அதிர்ச்சியாக இருக்கிறது. தேர்வு பயமும் எங்களைச் சூழ்ந்துள்ளது. அதனால் பள்ளி திறந்து, பாடங்களை நடத்தி ஒரு மாதத்திற்குப் பின் தேர்வு நடத்தினால் நிச்சயம் நாங்கள் நம்பிக்கையோடு தேர்வு எழுதுவோம்” என்றார்கள்.
’1 மாசம் பாடம் நடத்தி அப்புறமா எக்ஸாம் வையுங்க’ அரசு தீடீரென தேர்வை அறிவித்ததால் தன்னால் என்ன செய்வதென்றே புரியாமல் நிற்பதாகப் பேசிய மாணவி நந்தினி, “கரோனாவால் இரண்டு மாதங்களாக வீட்டிலேயே இருக்கிறோம். வீட்டில் இருப்பதால் எங்களால் சரியாகப் படிக்க முடியவில்லை. படித்தாலும், முதல் முறையாக பொதுத்தேர்வு எழுதுகிறோம் என்பதால் பயமாக இருக்கிறது. எனவே பள்ளிகளைத் திறந்து, பாடங்கள் நடத்தி எங்களின் பயத்தைப் போக்கி தேர்வெழுத வைத்தால், கட்டாயம் நாங்கள் நல்ல மார்க் எடுப்போம்” என்கிறார் நம்பிக்கையோடு.
’மாணவர்களை மனதளவில் தயார்படுத்துங்கள்’ மலைக்கிராம மாணவர்களின் நிலையை உணர்ந்து அம்மாணவர்களுக்காகப் பேசும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஒருவர், “போக்குவரத்து வசதியே இல்லாத மலைக்கிராமங்களில் படிக்கும் மாணவர்களுக்கு அரசின் அறிவிப்பு மிகப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆகவே ஊரங்கைத் தளர்த்தி, போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்து, பள்ளிகளைத் திறக்க வேண்டும். அவ்வாறு திறந்த பின்பு, பாடங்களை நடத்தி அவர்களை மனதளவில் தயார்படுத்தி தேர்வு நடத்தினால், தேர்ச்சி விகிதம் கூடும்” என்றார்.