திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் அதிகமான பிரியாணி கடைகள் மற்றும் சில்லி சிக்கன் கடைகள் உள்ளன. இன்று (ஜூன் 26) இளைஞர் ஒருவர் தென்னம்பட்டி நால் ரோட்டில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், தனது நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதற்கு அரை கிலோ சிக்கன் சில்லி வாங்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அருகே உள்ள அவரது நண்பரின் அலுவலகத்திற்குச் சென்று சிக்கனை கொடுக்கவே, நண்பர்கள் அனைவரும் அமர்ந்து சில்லி சிக்கனை சாப்பிட ஆரம்பித்துள்ளனர். அப்போது சில்லி சிக்கனில் தலைமுடி இருந்ததைக் கண்ட இளைஞர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், சில்லி சிக்கனனில் சிக்கனை விட மாவின் அளவு அதிகமாகவும் மற்றும் சில்லி நிறத்தின் அளவு அதிகமாகவும் இருந்துள்ளது.
இதனால் கோபமுற்ற இளைஞர் மற்றும் சக நண்பர்கள் இதுகுறித்து அந்தக் கடைக்காரரிடம் கேட்டறிய வேண்டும் என முடிவு செய்துள்ளனர். எனவே கடைக்காரரிடம் ஆதாரத்துடன் செல்ல வேண்டும் என்று எண்ணி சில்லியில் உள்ள மாவுகளைப் பிரித்தெடுத்து ஒரு கவரில் போட்டும் மற்றும் சில்லியில் உள்ள முடியைப் பிடித்துக் கொண்டு சில்லியை தொட்டில் ஆட்டுவது போல் வீடியோ, புகைப்படம் எடுத்தும் அந்த பிரியாணி கடைக்குச் சென்றுள்ளனர்.
பிரியாணி கடையின் முன் சென்ற இளைஞரின் நண்பர், இந்த கடை தானா என இளைஞரிடம் உறுதி செய்து பின் சில்லியிலிருந்து பிரித்தெடுத்த மாவு கவரை எடை போடும்படி கடைக்காரரிடம் கூறினார். கடை ஊழியர்கள் திரு திருவென முழிக்க, கடை உரிமையாளர் சில்லி மாவை எடை போட்டு 120 கிராம் எனக் கூறினார்.