திண்டுக்கல்: சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளையம்மாள். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் அரசால் 2 சென்ட் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டாவை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற அரசு ஊழியர் வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து வெள்ளையம்மாள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
10 பேர் தீ குளிக்க முயற்சி
மேலும் பட்டாவை கேட்டு சென்றபோது வெள்ளையம்மாளை முருகனும் அவரது தம்பி முனுசாமியும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஆக.23) வெள்ளையம்மாள் அவரது குடும்பத்தினர் 10 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் சென்றனர். இதனைக் கண்ட காவல் துறையினர் அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.
பின்னர் விசாரணையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு எழுதித் தரும் ஒருவர் தந்த யோசனையின்படி வெள்ளையம்மாள் ஒரு வாட்டர் கேனில் தண்ணீரில் மேலாக மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு நாடகமாடியது தெரியவந்தது.
காட்டிக்கொடுத்த இளைஞரின் செயல்
மேலும் வெள்ளையம்மாள் உடன் வந்த இளைஞர் கேமராவை பார்த்தவுடன் சிரித்துக்கொண்டே மீசையை முறுக்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விசாரணையில் தற்கொலை, நாடகம் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. வெள்ளையம்மாள், சகாயமேரி ஆகிய இரண்டு பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.