கடந்த 13ஆம் நூற்றாண்டில் முதல் புகைப்படம் உருவானது. உலகிலேயே முதலில் எடுக்கப்பட்ட புகைப்படம் எட்டு மணி நேரத்திற்கு பிறகு மறைந்து போனது. அதன் பிறகு கண்ணாடி பயன்படுத்தி நெகட்டிவ்களை எடுக்கும் முறையை கண்டுபிடித்தார் சர் ஜான் ஹெர்செல். இவரே ‘போட்டோகிராஃபி’ என்ற பெயரைத் தந்தவர்.
புகைப்படத்திற்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கவே நாடு முழுவதும் ஆகஸ்ட் 19ஆம் தேதி புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 181ஆவது புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. புகைப்படங்களை சிறந்த ’செய்திக் கடத்தி’ என்றே சொல்லலாம். ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு ஒரு செய்தியை விளக்குவதைக் காட்டிலும், சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீரியமான புகைப்படம் ஒன்று போதுமானது.
மனிதர்களிடம் இருக்கும் மிகச் சிறந்த கலைகளுள் ஒன்று புகைப்படக் கலை. அதிலும், காட்டு உயிர் புகைப்படக் கலைஞர்களுக்கு அது கண்கள் மேல் கேமரா தந்த வரம். முக்கியமாக வனங்களையும் வன உயிர்களையும் அவர்கள் காண்பதில்லை, உணர்வார்கள். காண்பதற்கும் உணர்வதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்களின் உணர்வு நமக்கு ஒரு காட்சி வழியான காட்டை கைவசப்படுத்தி அளிக்கிறது.
இந்தக் கலையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அடர்ந்த காடுகளில் அசாத்திய பயணம் மேற்கொண்டு, தனது அனுபவங்களின் வாயிலாக நம்மை அதிசயிக்க வைக்கிறார் காட்டு உயிர் புகைப்படக் கலைஞர் செந்தில் குமரன். செந்திலின் பூர்வீகம் திண்டுக்கல் மாவட்டம், பாலராஜக்காப்பட்டி. தந்தை அரசு அலுவலர், தாய் ஆசிரியை. இருவரும் பொறுப்பு மிகுந்த பணியில் இருந்ததால் சிறு வயது முதலே கண்டிப்புடன் வளர்க்கப்பட்டுள்ளார் செந்தில். அவரது தாயின் ஆசைப்படி தொழில்முனைவோர் ஆகவேண்டும் என்ற இலக்குடன் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தார்.
பின்னர் பெட்ரோல் பங்குகளுக்கு தேவைப்படும் பெரிய கன்டெய்னர் தயாரிக்கும் தொழிலை தனக்கு சொந்தமான இடத்தில் தொடங்கினார். பொறியியல் படித்துவிட்டு தொழில் முனைவோராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய செந்தில் வன உயிர் புகைப்படக்காரராக ஏன் மாறினார்? அவர் கூறும் விஷயங்கள் நம்மை அதிசயிக்க வைப்பதோடு மட்டுமின்றி, வனம், வன உயிர்கள் குறித்த புரிதலையும் அளிக்கின்றன.
எப்படி இந்த புகைப்படப் பயணம் சாத்தியமானது என செந்திலிடம் கேட்டோம். “கிராமத்தில் பிறந்ததால் இயற்கையோடும் கால்நடைகளோடும் அதிகம் பயணிக்கும் சூழல் இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள தென்னை, வாழை, வேப்ப மரங்கள், ஆடு, மாடு, கோழி என எங்களுடன் அவைகளும் உறவுகள்போல வளர்ந்த நினைவுகள் இன்னும் இருக்கிறது. முதன்முதலாக எனது செல்ஃபோன் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தேன். மான், யானை என படம் எடுக்க ஆரம்பித்ததும் கேமரா வாங்க வேண்டும் என்ற ஆசை தோன்றி எனது தேடலின் தீவிரத்தை உணர்த்தியது. பின்னர் முழுவதுமாக இதை செய்ய முடிவு செய்து புது கேமரா வாங்கினேன்.