திண்டுக்கல்: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் இயல்,இசை,நாடக முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் லதாபூரணம் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளரான சோ.தர்மன் பேசுகையில், இயந்திர மயமான இன்றைய நவீன காலத்தில் இயல் இசை நாடகம் என்ற முப்பெரும் அரிச்சுவடிகளை கற்றால் மட்டுமே மாணவிகள் ஒழுக்கம், தனித்திறமை உட்பட அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்.
உலகில் மூத்த மொழியான தமிழில் ஆயிரக்கணக்கான படைப்புகள் புதைந்து கிடக்கின்றது. ஒளவையார் காலம் தொட்டு பெண்கள் இத்துறையில் சாதித்து வருகின்றனர். ஆனால் 1955 முதல் 67 ஆண்டுகளாக படைப்பாற்றல் துறையில் வெறும் நான்கு பெண்கள் மட்டுமே சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ளனர். படைப்பாற்றல் துறையிலும் பணம்,பேர்,புகழ், மகிழ்ச்சி என கொட்டி கிடக்கின்றது.