திண்டுக்கல்: வேடசந்தூர் தாலுகா, எரியோட்டை அடுத்த குருக்களையன்பட்டியைச் சேர்ந்தவர், விவசாயி செல்வராஜ் (40). இவர் அதே பகுதியிலுள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்துவருகிறார். இவர் மார்ச் 31ஆம் தேதி அன்று, தோட்டத்தில் வேலையை முடித்துவிட்டு தோட்டத்து வீட்டில் தனது தாய் சௌந்தரம்மாள் (60) என்பவருடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று(ஏப். 01) காலை அவரது தோட்டத்து வீட்டுக்கு பால் கறப்பதற்காக பால்காரர் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கட்டிலில் தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து எரியோடு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இறந்து கிடந்த இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது செல்வராஜின் மனைவி சுபஹாசினியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர், சுபஹாசினியின் அலைபேசியை சோதித்துள்ளனர். மேலும் அதில் அதிகாலை 5 மணி அளவில் வந்த தொலைபேசி அழைப்பை வைத்து விசாரணையை ஆரம்பித்தனர்.