திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரம் அருகே மூங்கில் குளம் உள்ளது. இக்குளத்திற்கு மழை காலங்களில் பெய்யும் நீர் வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக மூங்கில் குளம் ஏற்கனவே நிரம்பி மறுகால் பாய்ந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ரெட்டியார்சத்திரம் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் அதிகளவு தண்ணீர் குளத்திற்குச் சென்றதால் இன்று (ஜன.02) அதிகாலை குளத்தின் கரை உடைந்து நீர் வெளியே சென்றது.
அதிகளவு நீர் வெளியே வந்ததால் குளத்தின் அருகில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் நீர் தற்போது வரை சென்று கொண்டுள்ளது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக குளத்தின் கரை உடைந்து நீர் ஊர் முழுவதும் சூழ்ந்துள்ளது. அதேபோல் குளத்திலிருந்து வரும் நீரின் அளவும் குறையாமல் வந்து கொண்டே உள்ளது.