திண்டுக்கலில் உள்ள அனுமந்தராயன் கோட்டை கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு சில ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு அரசும், ஊராட்சி நிர்வாகமும் நிரந்தர தீர்வை எடுக்காமல் காலம் கடத்தி வந்துள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. அதனால், தனியார் நிறுவனங்கள் விற்கும் கேன் வாட்டரை பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமந்தராயன் கோட்டை கிராம மக்கள், காலிக்குடங்களுடன் இன்று வந்தனர். குடிநீர் அளிக்காத அரசையும், கிராம நிர்வாக அலுவலர்களையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் இவர்களிடம் காவல்துறையினர் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.