பெரும் பஞ்சம், பேரழிவு இரண்டிலும் தண்ணீரின் பங்கு அளப்பெரியது. இந்த பூமியில் தண்ணீருக்காக தொடங்கிய போராட்டங்கள் ஒருபோதும் தணிந்தபாடில்லை. ஆனால் தண்ணீரால் எப்போதும் விவசாயிகளுக்கும் பாமரர்களுக்கும் மட்டும்தான் கண்ணீர். வானம் பார்த்த பூமியான திண்டுக்கல்லின், தாகம் தணிக்கும் முக்கிய நீராதாரம்தான் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம். ஆனால் இந்த தண்ணீரை ஒரு பகுதி விவசாயிகள் மட்டுமே பயன்படுத்தும் அவலம் கடந்த 10 ஆண்டுகளாக அரங்கேறி வருகிறது.
காமராஜர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் வழியாக சித்தையன்கோட்டை பகுதிக்கு நீர் செல்கிறது. இதன் குறுக்கே 15 அடி தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்புச் சுவரால் ஒரு பகுதி விவசாயிகள் மட்டுமே பலனடைந்து வருவதாக கூறப்படுகிறது. தடுப்புக்கு அந்தப் பக்கம் உள்ள 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக தங்களுக்கான தண்ணீர் வேண்டும் என போராடி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து பேசிய விவசாயி சின்னப்பன், "இந்த மண்ணுல நீர் தடம் பதிஞ்சு பத்து வருஷமாச்சு. இன்னிக்கு நாளைக்குன்னு இழுத்தடிச்சு எப்டியோ 10 வருஷம் ஓடிப்போச்சு. ஆனா இத்தன வருஷத்துல மண்ணுலயும் ஈரம் படல. பக்கத்து ஊர்க்காரங்க மனசுலயும் ஈரம் வரல. எப்பவும் அணைல இருந்து வர்ற தண்ணி சித்தையன்கோட்டை, நிலக்கோட்டை, வாடிப்பட்டிக்கு அங்கிட்டு வைகை ஆத்துல போய் சேரும். அதே மாதிரி ஆத்தூர் வழியா அனுமந்தராயன் கோட்டை, பொன்மான் துறை, புதுப்பட்டி குளம் தாண்டி அழகாபுரி அணைக்கு போகும். அங்கிருந்து கரூர் காவிரில கலக்கும். இதற்கு இடையிலுள்ள 70 கிராமத்து மக்கள் இந்த தண்ணிய மட்டும்தான் நம்பி இருந்தாங்க. இந்த தண்ணி கிடைக்காம விவசாயம் பண்ணவங்க நிறைய பேரு கடனாளியதான் ஆகிருக்கோம். விவசாயம் நாட்டோட முதுகெலும்புன்னு சொல்லிட்டே இருந்தா போதாது. அதை காப்பாத்துறதுக்கான வழியையும் அரசு எடுக்கனும்" என்று புலம்பி தவித்தார்.
இது குறித்து சட்டம் பயிலும் இளைஞர் ஆல்வின் ஜெகன் கூறுகையில், "சின்ன வயசுல இந்த ஆத்துல ஆடிப்பாடி விளையாண்டு சந்தோஷமா இருந்திருக்கோம். ஆயிரம் ஞாபகம் இந்த ஆத்தோட சேர்ந்திருக்கு. அது வறண்டாலும் அதோட எங்களுக்கு இருக்குற உறவு ஊத்து போல மனசுல ஊறிட்டே இருக்கு. குடகனாறு தண்ணியால செழிப்பா இருந்த எங்க ஊரு இப்ப பொட்ட காட மாறி போச்சு. தண்ணி கிடைக்காம விவசாயம் இல்லாமல் போனதால எங்க ஊர்க்காரங்க நிறைய பேர் சென்னை, கோவைன்னு வேற ஊருக்குப் பொழப்பு தேடி போயிட்டாங்க. இதுக்கெல்லாம் காரணம் அந்த தடுப்பணைதான். இந்த தடுப்பணைய 15 அடிக்கு கட்டின பிறகு மழையே வந்தாலும் எங்களுக்கு தண்ணி வர மாட்டேங்குது" என்று வேதனை தெரிவித்தார்.