திண்டுக்கல்:வேடசந்தூர் தாலுகா பழனி ரோட்டில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருபவர் ஆனந்த். இவர் வடமாநில இளைஞர் ஒருவரை கரண்டியை எடுத்து கடுமையாக தாக்கியும், கால்களால் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து விசாரிக்கையில் கரோனா காலகட்டத்தில் குடிபோதையில் வீட்டிற்குள் வந்த ஆனந்த் தன்னுடைய இரண்டு வயது மகளை தூக்கி துணி துவைப்பது போல் கடுமையாக தாக்கியுள்ளார். அதனை அவரது மனைவி தடுத்தும், அவரையும் கடுமையாக தாக்கியதாக மனைவி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆனந்தின் மனைவி, அவருடைய தந்தையிடம் தகவல் கொடுத்ததின் பேரில், திருப்பூர் மாவட்டம் ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன் மனைவியை மிரட்டுவதற்காக வடமாநில இளைஞரை கடுமையாக தாக்கி, அதனை வீடியோ எடுத்து மனைவிக்கு அனுப்பி ”உன்னையும் இது போன்று தாக்கி கொலை செய்து விடுவேன்” என்றும் வழக்கை வாபஸ் வாங்குமாறும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.