திண்டுக்கல்:நிலக்கோட்டை தாலுகா, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு கொடைரோடு கன்னிமார் நகரைச் சேர்ந்த பாண்டி என்ற விவசாயி புகார் மனு அளித்துள்ளார். அதில், 'தனக்கு சொந்தமாக ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில், நான் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். இதை வைத்து என் வாழ்வாதாரத்தை வளர்த்து வரும் சூழ்நிலையில் பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்ன கருப்பு உருப்பட மூன்று பேரும் சேர்ந்து எனது நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்கள்.
அடியாட்கள் கொண்டு என்னையும் எனது மகனையும் எனது குடும்பத்தாரையும் தாக்கி வருகின்றனர். காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் என்றும் கூறி மிரட்டி உள்ளனர்’ என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சண்முக லட்சுமியிடம் விவசாயி பாண்டி புகார் மனு அளித்துள்ளார்.
புகார் மனு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின் நீதிமன்றம் உடனடியாக பாண்டியை மிரட்டும் பள்ளபட்டி பகுதியைச்சேர்ந்த மூன்று நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
அந்த உத்தரவு நகலையும் பெற்றுக் கொண்டு, பாண்டி காவல் நிலையத்தில் சென்ற பொழுது காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக கடந்த 7ஆம் தேதி இரவு அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் சென்று தான் கொடுத்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். காவல் துறையினர் கண்டுகொள்ளாததால் தான் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து, காவல் துறை ஆய்வாளர் சண்முக லட்சுமி மற்றும் அங்கு பணிபுரியும் காவல் துறையினர் முன்பு விஷம் அருந்தியுள்ளார்.