திண்டுக்கல்:பழனியில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த கேரள பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பழனிக்குச் சென்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா இன்று (ஜூலை12) விசாரணை மேற்கொண்டுவருகிறார்.
குற்றம் நடந்ததாகக் கூறப்படும் அடிவாரம் காவல் நிலையத்திற்குள்பட்ட காவல் துறையினர், தங்கும் விடுதி உரிமையாளர், பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
அடுத்தக்கட்டமாக பழனி காவல் துறையினரை கேரளாவிற்கு அனுப்பி, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண், அவரது கணவரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
மூன்று குழு அமைத்து விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா, "கேரள பெண் பழனிக்கு வந்தபோது வன்புணர்வு செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குத் தொடர்பாக பெண் காவல் ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகள், தொலைபேசி உரையாடல்கள், சாட்சிகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்த மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனது நேரடி கண்காணிப்பில் இந்தக் குழு செயல்படும்.