திண்டுக்கல்:ரஷ்யாவிற்கும் - உக்ரைனுக்கும் மூன்றாவது நாளாகப் போர் நடந்துவரும் சூழலில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் அங்குச் சிக்கியுள்ள நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவர், வெடி சத்தமும் அபாய ஒலியும் அச்சத்தில் ஆழ்த்துவதாகக் கூறி காணொலி ஒன்றை பெற்றோருக்கு அனுப்பியது அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த கால்நடை மருத்துவரின் மகன் சிரில் போஸ்க்கோ உக்ரைனின் செர்னோபில் அருகேயுள்ள ஜெப்ரோசியா மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகின்றார்.
அவரை மீட்டுத் தரக்கோரி அவரது பெற்றோர் மத்திய, மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும், ஆனாலும் மூன்று நாள்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் மிகுந்த வேதனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நேற்றுமுதல் பல நேரங்களில் அவரைத் தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் இணையம், மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும், இதனால் மக்களின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளதாகவும் - மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்தனர்.