தேனி மாவட்டம் ஜெயம் நகரை சேர்ந்தவர் அழகுராஜா (31). இவர் ரைட்டர் பிசினஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரூட் இன்சார்ஜாக பணிபுரிந்துவருகிறார்.
இவர் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். அந்த புகாரில், ”கடந்த பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை உள்ள 12 ஏடிஎம்களில் 12 லட்சம் ரூபாய் திருட்டு நடந்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே கொள்ளைச் சம்பவம் நடந்த ஏடிஎம் மையங்களில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது திண்டுக்கல் மாவட்டம் கொத்தபுள்ளியைச் சேர்ந்த தெய்வேந்திரன் (21), பச்சலநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (21) ஆகிய இரண்டு ஏடிஎம் ஆப்பரேட்டர்கள் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனடிப்படையில் இருவரிடமும் நடத்திய விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பி விட்டு, நள்ளிரவில் அந்த ஏடிஎம்களில் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து தெய்வேந்திரன், சக்திவேல் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், அவர்கள் இருவரையும் இரண்டாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.