திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடியனூத்து ஊராட்சியில் வசிப்பவர் சமந்தா. திருநங்கையான இவர் பொறியியல் முடித்துவிட்டு கடந்த ஐந்து வருடங்களாக இப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டின் எதிரே உள்ள சீனிவாசன் என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மணல் திருடும்போது சமந்தா வீட்டிலுள்ள வளர்ப்பு நாய் குறைத்துள்ளது. இதன் காரணமாக நாயை விஷம் வைத்துக் கொன்றுள்ளனர்.
திருநங்கைக்கு கொலை மிரட்டல் - டிஐஜியிடம் மனு
திண்டுக்கல்: கொலை மிரட்டல் விடுத்த நபர்களுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஐஜி அலுவலகத்தில் திருநங்கை மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக திண்டுக்கல் தாலுக்கா காவல் நிலையத்தில் சமந்தா புகார் அளித்துள்ளார். இப்புகாரை விசாரணை செய்த காவல் ஆய்வாளர், காவலர்கள் சீனிவாசனுக்கு ஆதரவாக பேசியதாகவும், சமந்தாவை இப்பகுதியில் இருந்து வெளியேறுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் சென்றவுடன் சீனிவாசன் சமந்தாவை தகாத வார்த்தைகளால் அவரது சாதி பெயர், உருவ மாற்றத்தை இழிவாக குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
இதையடுத்து இவர்கள் மீது துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சீனிவாசன், அவருக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமியிடம் திருநங்கை சமந்தா புகார் மனு அளித்தார்.