திண்டுக்கல்: கொடைக்கானல் கோடை விழாவிற்கு வருகை தந்த தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிற நல்லாட்சியில் அனைத்து துறைகளும் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து மாவட்டங்களும் சுற்றுலா மேம்பாட்டிற்காக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அப்போது கொடைக்கானலில் படகு இல்லங்கள், கோக்கர்ஸ் வாக், சின்ன பள்ளம் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கு தளம், மன்னவனூர் பகுதியில் உள்ள சாகச சுற்றுலா மையம் ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தேன், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மன்னவனூர் பகுதியில் விவசாயிகள் சாகச சுற்றுலா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக கூறப்பட்டது. அது குறித்து விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுற்றுலா மேம்பட்டால் தான் கிராமப் பகுதிகளும் மேம்படும், பொருளாதாரமும் மேம்படும். கொடைக்கானலுக்கு கடந்த ஆண்டு மட்டும் 55 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இதனால் பொருளாதார மேம்பாடும் அடைந்துள்ளது.
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் படகு சவாரி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் ஆய்வு செய்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி செல்லும் இடங்களை முதலமச்சரின் அறிவுரைகளின் படி மாஸ்டர் பிளான் அமைத்து சுற்றுலா தளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.