திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் சுமார் 80 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவினால் மார்ச் 29ஆம் தேதி முதல் இவர்கள் பணிக்கு வர வேண்டாம் என சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது.
இவர்கள் வேறு வேலையின்றி, வருமானம் இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி மீண்டும் பணிக்கு வந்த சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்குவதற்குப் பதிலாக, 1, 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அதுவும் ஒரு சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பணியை முடித்த பகல் நேரப் பணியாளர்கள் வசூல் செய்த சுங்கக் கட்டணத்தைப் பெட்டியில் பூட்டி நிர்வாகத்திடம் ஒப்படைக்க மறுத்து, அனைவருக்கும் சம்பளம் வழங்கக்கோரி காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், வருவாய்த் துறையினரிடம் ஊழியர்கள் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சுங்கச்சாவடி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், மே 27ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்கு 75 விழுக்காடு ஊதியத்தை அளிப்பதாக சுங்கச்சாவடி மேலாளர் அரசு அலுவலர்கள் முன்னிலையில் உறுதியளித்தார். இதையடுத்து 5 மணி நேர காத்திருப்புப் போராட்டத்தை ஊழியர்கள் கலைத்தனர்.
இதையும் படிங்க:சுமார்100 புலம்பெயர்ந்த தொழிலார்கள் மீண்டும் கேரளாவுக்கே திருப்பி அனுப்பிவைப்பு