திண்டுக்கல்: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. இதில் முக்கிய சுற்றுலாத்தலமாக இருப்பது, பேரிஜம் ஏரி. கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் பேரிஜம் ஏரிக்கு செல்வது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், பேரிஜம் ஏரியில் புதிதாக பரிசல் சவாரி வனத்துறை சார்பாக தொடங்கப்பட்டது. தற்போது இந்த பரிசல் சவாரிக்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
ஏனென்றால், பேரிஜம் ஏரியிலிருந்து செல்லக்கூடிய நீர்தான் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும், ஆசியாவிலேயே இரண்டாவது நன்னீர் ஏரியாகவும் இருப்பது, பேரிஜம் ஏரி. இங்கு பரிசல் சவாரிக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் பொழுது, சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்று பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தன் அடிப்படையில், பரிசல் சவாரியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பெரியகுளம் மற்றும் கொடைக்கானல் பகுதி மக்களும் கோரிக்கை வைத்தனர்.