திண்டுக்கல்:காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை 16) திண்டுக்கல் வருகை தந்தார். பின்னர், திண்டுக்கல் வத்தலக்குண்டு புறவழிச்சாலை, செட்டி நாயக்கன்பட்டி, ஆர்.எம். காலனி, பேகம்பூர் உட்பட பத்து இடங்களில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார்.
அதனையடுத்து கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி ஆண்டாக கொண்டாடி வருகிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உயிர்நாடியாகவும் உறுதுணையாகவும் இருந்தவர் காமராஜர். தமிழகத்திற்காக எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்தவர். கிராமங்கள்தோறும் ஆரம்பப்பள்ளி இருக்க வேண்டும் என நினைத்து அதனை செயல்படுத்தியவர் அவர். முதன்முதலாக பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர். இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி மேம்படுத்தப்பட்டது எனக் கூறினார்
பாஜக தமிழகத்திற்கு எதிராக செயல் படுகிறது: பாஜக அனைத்துக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்று எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அனைத்து திட்டங்களும் வடமாநிலங்களுக்கே சென்று கொண்டிருக்கிறது. புதிய ரயில்வே தடங்கள் அனைத்தும் வட மாநிலங்களுக்கே செயல்படுத்தப்படுகின்றன.
ஆனால், தமிழகத்திற்கு புதிய ரயில்வே வழித்தடம் கொண்டு வரவில்லை. அதே போல் வட மாநிலங்களுக்கு புதிய சாலைத் திட்டங்கள் ஏராளமாக அமல்படுத்தி வருகின்றனர். ஆனால், தமிழகத்திற்கு புதிய சாலைகள் அமைக்கவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் எனக் கூறி ஏழு வருடங்கள் ஆகியும் இதுவரை பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இதோடு ஆரம்பிக்கப்பட்ட மற்ற மருத்துவமனைகள் எல்லாம் வடமாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெளிப்படையாக அப்பட்டமாக பாஜக தமிழகத்தை புறக்கணிக்கிறது என்பதை ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்
அண்ணாமலையின் சுவிஸ் வங்கி கணக்கு:தமிழ்நாட்டில் உள்ள பாஜக-வினருக்கு உணர்ச்சிகளே கிடையாது. தமிழகத்திற்காக எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசிடம் இருந்து வாங்கி வரமுடியவில்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி மொரிசியஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக அப்பட்டமாக பொய் சொல்கிறார். இதற்கு என்ன ஆதாரம் உள்ளது. வாய் இருக்கிறது என்பதற்காக டெல்லியில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எந்த தலைவர் மீதும் குற்றச்சாட்டு கூற முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அடிக்கடி ஏன் வெளிநாடு பயணம் செய்கிறார். நான் கூறுகிறேன். அவர் சுவிஸ் வங்கியில் பணத்தை முதலீடு செய்வதற்காக செல்கிறார் என குற்றம்சாட்டுகிறேன். ஆகவே, அண்ணாமலை வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். மத்திய அரசில் உள்ள அமைச்சர்களில் அமித்ஷா உட்பட 33 பேர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். பாஜகவினர் என்ன நேர்மையானவர்களா? அரிச்சந்திரர்களா? பாஜக எப்படி செந்தில் பாலாஜி மீது குற்றம்சாட்டலாம் என எச்சரித்தார்.